மதிப்புரை. குடி அரசு – நூல் மதிப்புரை - 15.01.1933

Rate this item
(0 votes)

" இளைஞர் பாடல்கள்” என்ற தமிழ் நூலொன்று வரப்பெற்றோம். அஃது கோவைத் தமிழ்ச்சங்க அமைச்சரும், பொதுநல உழைப்பாளரும், தமிழ் மொழி வல்லுனருமான தோழர். ராவ்சாஹிப் சி.எம். இராமச்சந்திரஞ் செட்டியார் பி.ஏபி.எல். அவர்களால் இயற்றப்பெற்று கோவைத் தமிழ்ச் சங்கத் தாரால் வெளியிடப்பட்டது. இந்நூல் எளிய நடையில் புதியமுறையில் இளைஞர்களுக்கு உணர்வு ஊட்டும் நோக்குடன் கடவுள், ஞாயிறு ஒழுக்கம், நிலா, மறை, யாறு, கல்விளையாட்டு, ஆகாயவிமானத்தில் முதல் அனுபவம், நாட்டுப்பற்று அல்லது தாய்நாடு முதலிய பல்வேறு பொருள்களைப் பற்றியும் மலையும் அணியும். ஹாதிம்தாய் என்னும் சிறுகதைகளை விளக்கியும் செய்யுள் ரூபமாக சாதாரண மக்களும் அறியும் வண்ணம், எழுதப்பட்டுள்ளது. கடவுளுணர்ச்சியையும், சோதிடப்பெருமையையும், இயற்கைக் காட்சியின் தன்மையையும், தேசீய உணர்ச்சியையும் கார்த்திகைத் திருநாள் முதலிய பல விழாக்களின் அருமையையும் பற்றிய நம்பிக்கை உடையோருக்கும் தமிழின் பெருமையையும் கவிச் சுவையை அறிய விரும்புபவர்களுக்கும் இந்நூல் மகிழ்ச்சியைத் தரத்தக்கதாகும் என்பதில் ஐயமில்லை.ஆனால் தமிழ் பெருமையையும் கவி இன்பக்கலையையும் மக்களுக்கு ஊட்ட வேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீது இயற்றப்படும் நூல்கள் இம்மாதிரி ஆத்திகப் பிரசாரத்துக்கும் பயன்படும்படியாய் இல்லாமல் பகுத்தறிவு பிரசாரத்திற்கே பயன்படும்படி இருந்தால் மாத்திரமே அவை மக்கள் சமூகத்திற்கு நன்மை பயக்க, நீடூழி வாழ இடமுண்டு. அங்கனமில்லாமல் இனியும் தேரையும், திருவிழாவையும், நோன்பையும், விரதத்தையும் கொண்ட புராணக்கதைகள் தமிழ் பெருமை வேஷத்தில் வந்தாலும், கவியின்பக்கலை வேஷத்தில் வந்தாலும் அவற்றிற்கெல்லாம் உலகில் இனி இடம் கிடைப்பது என்பது மிக அருமையேயாகும். 

எனினும் தோழர் இராமச்சந்திரஞ் செட்டியார் அவர்களால் இயற்றப் பட்ட இந்நூல் 100 க்கு 75 பாகம் யாவரும் பாராட்டும் வண்ணமே அமையப் பட்டிருக்கிறது கண்டு மகிழ்ச்சியடைகிறோம். வேண்டுவோர் கோவை தமிழ் சங்கத்திற்கெழுதிப் பெற்றுக்கொள்ளவும். 

குடி அரசு – நூல் மதிப்புரை - 15.01.1933

Read 14 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.